Home அறிவித்தல்கள் நல்லூர் இசையரங்கு மேடையில் இசைமேதை இராதாகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது!

நல்லூர் இசையரங்கு மேடையில் இசைமேதை இராதாகிருஷ்ணனின் உயிர் பிரிந்தது!

Nimal antan_CIஈழத்தின் பிரபலமான வயலின் இசைமேதை உருத்திராபதி இராதாகிருஷ்ணன் நேற்றுமாலை நல்லைக் கந்தன் ஆலய உற்சவத்தையொட்டி நடத்தப்பட்ட இசையரங்கில், வயலின் கச்செரி நடத்திக் கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார். நேற்று மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அரங்கில் அவரது மகள் சைந்தவி நிசாகரன் உடன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக் கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

அமரர் உருத்திராபதி – திருமதி தையலாம்பாள் தம்பதியரின் மகனாக 27.06.1943இல் இணுவில் என்னும் சிற்றூரில் இவர் பிறந்தார். இணுவில் மஹாஜனாக் கல்லூரியிலும் யாழ்.பரமேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற இவர் பல்துறைக் கலைஞராக விளங்கிய தனது தந்தையிடமே குரலிசையையும் விரலிசையையும் கற்றுக்கொண்டார். பின்னர்,தமிழ்நாட்டில் தனது இசைக்கல்வியை பூர்த்தி செய்தார்.

ஈழத்தின் இசை வரலாற்றில் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளிற்கும் மேலாகப் பக்கவாத்திய, தனியிசைக் கலைஞராகப் பணியாற்றி இரண்டாயிரத்து ஐநூறிற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்ட மாபெரும் வயலின் கலைஞராக விளங்குபவர் இசைஞானதிலகம் உ.இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.