Home செய்திகள் இலங்கைச் செய்திகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து இலங்கை செயற்பட வேண்டும் : அமெரிக்கா

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து இலங்கை செயற்பட வேண்டும் : அமெரிக்கா

_c2fd7d12-f834-11e5-860d-a0ffe8a3a28f

மனித உரிமை சார்ந்த விடயங்களுக்கு மதிப்பளித்து, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார்.

கொலம்பிய பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

போருக்கு பின்னரான ஜனநாயக செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்த நிஷா பிஷ்வால், இன்னும் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் பலவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அலுவலகமொன்றை அமைக்கவுள்ளமை குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, தமது உறவுகளை தொலைத்துவிட்டு, அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் காத்திருக்கும் மக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு, நீதியை நிலைநாட்டுவதன் ஊடாவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்த நிஷா பிஷ்வால், இவ்விடயங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை தனித்து விடப்படவில்லையென்றும், அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இலங்கைக்கு உண்டெனவும் குறிப்பிட்டார்.